போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்


போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2019 3:00 AM IST (Updated: 28 Jan 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

7 வழக்குகள்

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே பி.கே.நகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 22). இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன. யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் கவுதமின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த 25-ந் தேதி இரவு யஷ்வந்தபுரத்தில் நின்று கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் மாருதி ஆகிய 2 பேரையும், ரவுடி கவுதம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கி இருந்தார். இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம், அவரது கூட்டாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிளாட்டினம் சிட்டி அருகே பைப்லைன் பகுதியில் ரவுடி கவுதம் தனது கூட்டாளிகளுடன் நிற்பதாக யஷ்வந்தபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், சக போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார்.

போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

அப்போது பைப்லைன் பகுதியில் நின்று கொண்டிருந்்த கவுதம் தனது கூட்டாளிகள் 2 பேருடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் கவுதமின் கூட்டாளிகள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கவுதமை மட்டும் சுற்றி வளைத்ததுடன், அவரை பிடிக்க போலீஸ்காரர்கள் சிவக்குமார், பைஜேந்திரா முயன்றனர். உடனே தன்னிடம் இருந்த அரிவாளால் போலீஸ்காரர்கள் சிவக்குமார், பைஜேந்திராவை ரவுடி கவுதம் வெட்டினார். இதில், 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு சரண் அடைந்து விடும்படி ரவுடி கவுதமை எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து விட்டார். மேலும் போலீஸ்காரர்களை மீண்டும் தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடவும் முயன்றார்.

ரவுடியை சுட்டுப்பிடித்தனர்

உடனே இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால், ரவுடி கவுதமை நோக்கி 2 முறை சுட்டார். இதில், அவரது காலில் 2 குண்டுகள் துளைத்ததால், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து கவுதம் துடிதுடித்தார். பின்னர் போலீசார், அவரை பிடித்து கைது செய்தனர். கவுதமின் காலில் குண்டுகள் துளைத்திருப்பதால் உடனடியாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோல, படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் சிவக்குமார், பைஜேந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான கவுதமின் கூட்டாளிகள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story