சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மறியலில் கைது; 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 பேர்களில் 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் புரட்சிதம்பி, ஆசிரியர்கள் சங்கர், பெஞ்சமின், ஜெயபால், சாமுவேல் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள் இளங்கோ, முத்துச்சாமி, பிரபாகரன் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையில் பணிபுரியும் செல்வ குமார், முத்துராமன், அருணகிரி வருவாய்துறையில் பணிபுரியும் கிருஷ்ணகுமார் சத்துணவு பிரிவில் பணிபுரியும் பாண்டி, பழனியப்பன், நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரியும் பிச்சை ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 15 பேரில், ஆசிரியர்களான 8 பேர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதன்மைகல்வி அதிகரி பாலுமுத்து கூறியதாவது:- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 பேருக்கு பணியிடை நீக்க உத்தரவை அந்த பள்ளிகளின் செயலாளர் மூலம் வழங்கப்படும். மற்ற 5 ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் தற்காலிக ஆசிரியர்கள் அனுப்பப்படும் இடங்களை இன்று (திங்கட்கிழமை) காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் காரணமாக கல்வி துறை சார்பில் 2 மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரி கண்காணிப்ப அலுவலராக நியமிக்கபட்டுள்ளனர். அதில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் அலுவலராக நியமிக்கப்பட்ட பள்ளி தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி நேற்று சிவகங்கைக்கு வந்தார். அவர் போராட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கைது செய்யப்பட்ட 15 பேர்களில் 8 பேர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் துறை அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசு அச்சுறுத்தல், கைது நடவடிக்கைகள் மூலம் எங்கள் போராட்டம் இன்னும் வீரியமடையும். திட்டமிட்டபடி தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். எல்லா தடைகளையும் மீறி நாளை சிவகங்கை அரண்மனை வாசலில் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story