திருப்புவனம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
திருப்புவனம் அருகே கிளாதரி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே நாலூர் நாட்டை சேர்ந்த கிளாதரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நெருதமடை அய்யனார், அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கிளாதரி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு நடத்த கிராம கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.
இந்தநிலையில் நேற்று கிளாதரி கிராம பொட்டலில் வடமாடு மஞ்சுவிரட்டு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில வீரவிளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், வடமாடு நலச்சங்க மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் அய்யம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தனர்.
பின்னர் நடந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை கிளாதரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
முடிவில் மஞ்சுவிரட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிளாதரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story