புதுச்சேரியில் தனித்தனியே தாய், மகள் கொலை: ‘கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவிட்டேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


புதுச்சேரியில் தனித்தனியே தாய், மகள் கொலை: ‘கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவிட்டேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:36 AM IST (Updated: 28 Jan 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தாய், மகளை கொலை செய்த வழக்கில் கைதானவர் தெரிவித்த தகவலின்பேரில் 47 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவு செய்ததாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த நம்பிவரதன் மனைவி கலைவாணி (வயது 46). இவர் கடந்த 21.9.2015 அன்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு தொடர்பாக எந்த விவரமும் கிடைக்காமல் இருந்தது வந்தது. இதற்கிடையே அரும்பார்த்தபுரத்தில் வசித்து வந்த கலைவாணியின் தாயார் கிருஷ்ணவேணியும் மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இந்த கொலை சம்பவங்களில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த டாக்டர் தமிழ்செல்வி என்பவரை நகைக்காக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(60) ரெட்டியார்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதாவது தனது உறவினர்களான கலைவாணி, அவரது தாயார் கிருஷ்ணவேணி ஆகியோரை தனித்தனியாக கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த நகைகளை விற்க அவருக்கு கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற செல்வம்(34) உதவியது தெரியவந்தது. கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்தும் ஆறுமுகத்துக்கு சதீஷ் உதவி செய்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ஆறுமுகம், சதீஷ் ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் ஆறுமுகம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சிறு வயதில் இருந்தே நான் குதிரை பந்தயத்திற்கு அடிமையாகி இருந்தேன். எனவே சென்னைக்கு சென்று கிடைத்த பணத்தை எல்லாம் குதிரை பந்தயத்தில் செலவு செய்தேன். இதற்காக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தேன். கலைவாணி எனக்கு உறவினர். அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் நிறைய நகைகள் அணிந்திருப்பார். அவரிடம் பணம் கேட்க முடிவு செய்தேன். பணம் தர மறுத்தால் கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பது என முடிவு செய்தேன்.

அதன்படி சம்பவத்தன்று ஒரு பையில் கத்தி, மிளகாய்தூள், ஒரு சட்டையை வைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு கலைவாணியிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்ததுடன் என்னை திட்டினார். அப்போது எனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்த முயன்றேன். அதை பிடுங்கி என்னை கலைவாணி தாக்கினார். அதில் எனது தோளில் லேசான காயம் ஏற்பட்டது.

உடனே சுதாரித்துக் கொண்ட நான் அவரது கையில் இருந்த கத்தியை பறித்து சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கலைவாணியை கொலை செய்தேன். அதன்பின் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டேன். பின்னர் ரத்தகறைகள் இருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி கழுவினேன். போலீஸ் மோப்பநாய் துப்பு துலக்காமல் இருக்க மிளகாய் தூளை தூவினேன். நான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். அதன்பின் கலைவாணி கொலை குறித்து போலீசார் என்னிடமும் விசாரணை நடத்தினார்கள். அதன்பின் விட்டுவிட்டனர். கலைவாணி குடும்பத்துக்கும் என்மீது சந்தேகம் வரவில்லை.

கொள்ளையடித்த நகைகளில் 20 பவுனை அடகு வைத்தேன். மீதி நகைகளை கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த எனது நண்பர் சதீஷ் என்கிற செல்வம்(34) என்பவரிடம் கொடுத்து நகைகளை உருக்கி விற்றேன். அந்த பணத்தையும் குதிரை பந்தயத்திற்கே செலவு செய்தேன். வட்டி கட்ட முடியாததால் வட்டிக்கடையில் இருந்த நகைகளை விற்று மீதி தொகையை பெற்றுக்கொண்டேன். கலைவாணி கொலையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறியதை பயன்படுத்தி அதே பாணியில் அவரது தாயார் கிருஷ்ணவேணியையும் கொலை செய்து நகைகளை திருடி விற்று செலவு செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதனைதொடர்ந்து ஆறுமுகம் தெரிவித்த தகவலின் பேரில் அவர் விற்றதாக கூறப்படும் இடங்களில் இருந்து 47 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். நகைகளை அடகு வைக்க அவருக்கு உதவியவர்களை போலீசார் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்த்துள்ளனர். தாய், மகள் கொலையில் கைதான ஆறுமுகம், அவருக்கு உதவிய சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story