தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் கடலூரில் கமல்ஹாசன் பேச்சு


தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் கடலூரில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கடலூரில் கமல்ஹாசன் கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சான்றோன் விருது வழங்கும் விழா கடலூர் சி.கே. பள்ளியில் நடந்தது. விழாவில் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் வரவேற்றார். பொருளாளர் சுகா, சான்றோன் விருது பற்றி விளக்கி பேசினார்.

விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கலந்து கொண்டு கல்வி, மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, வரலாறு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 9 பேருக்கும், கடலூர் சிறகுகள், நம்ம கடலூர் அமைப்புகளுக்கும் சான்றோன் விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சான்றோர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்களை உருவாக்கும் பொறுப்பு நம் அனைவரிடத்திலும் உள்ளது. ஊழல் அரசியலில் இருந்து நம்மை காக்கும் இரு நிழல்கள் காந்தி, அம்பேத்கர்.

மக்கள் நீதி மய்யத்தினர் யாரும் தனி மனித தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை என்பது அடி வாங்கிக்கொண்டு கோழையாக இருப்பது அல்ல. வீரத்தின் உச்சக்கட்டம் தான் அகிம்சை. இது தெரிந்தால் தான் நாம் அகிம்சையை நோக்கி பயணிக்க முடியும். எல்லாம் தெரிந்து தான் நாம் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறோம். மாற்றத்தை நாம் தான் கொண்டு வர வேண்டும்.

நாம் செயல்வீரர்கள். நமக்கு பேசத்தெரியாது. யார் நல்லவர்கள் என்பதை கண்டுபிடியுங்கள். மக்கள் நீதி மய்யத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று சிலர் கேட்கிறார்கள். ஒவ்வொரு ஊரில் உள்ள தாய்மார்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. நான் தள்ளாடும் போது எனக்கு முன்னால் நீங்கள் ஓட வேண்டும். வென்றாக வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம்.

காந்தியை இளம்வயதில் விமர்சித்த நான் வாழ்வையும், துரோகத்தையும் சந்தித்த பிறகே காந்தியத்தை புரிந்து கொண்டேன். தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை. மொழி பிரச்சினை, திராவிடம் பேசுகிறார்கள் என்று வட மாநிலத்தவர்கள் கூறுகிறார்கள்.

ஊழலை ஒழிப்பது உங்களிடம் இருந்து தான் ஆரம்பிக்கிறது. மனசாட்சி தான் சிறந்த நீதிமன்றம். நேர்மை என்பது அடையாளம். அந்த அடையாளத்தை தாண்டாதீர்கள். ஊழலை ஒழியுங்கள் தன்னால் மக்கள் நீதி மய்யம் ஆட்சி பீடத்தில் அமரும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிலர் கேட்டு வருகிறார்கள். எனது இப்போதைய நோக்கம் எல்லாம் தமிழகம் மட்டும் தான்.

தமிழகம் முன்னேறினால், இந்தியாவே திரும்பி பார்க்கும். ஆகவே தமிழகத்தை சரி செய்வோம். இதை செய்தால் பஸ் மீது நின்று மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டார்கள். இது பற்றி கேள்வி கேட்காதது நம்முடைய கோழத்தனம்.

நிகழும் அரசியல் வேறு. மக்கள் நீதி மய்யம் வேறு என்பதை இப்போதும் சொல்கிறேன். மக்களிடம் ஏன் காசு வாங்கி கட்சி நடத்துகிறீர்கள் என்று ஒரு அமைச்சர் கேட்டார். மக்களுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவர்களிடம் வாங்கியதை அதிகமாக திருப்பி கொடுப்பேன். ஆனால் அந்த அமைச்சரும், மக்களிடம் வாங்கியதை தானே திருப்பி கொடுக்கிறார். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவை கவிஞர் சினேகன் தொகுத்து வழங்கினார்.

இதில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன் (வடக்கு), முகமது ரபீக்(மேற்கு), மூர்த்தி (மத்திய), சரவணன்(கிழக்கு), தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், சேட்டு, முருகன், தென்மண்டல பொறுப்பாளர் ராஜ்நாராயணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜபர்சன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறினார். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

40 ஆண்டு கால தமிழக அரசியலில் நிறைய ரவுடிகள் இருக்கிறார்கள். அதனால் தான் படித்தவர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் செய்யாததை நான் செய்வேன். திராவிடம் என்பது ஒரு கட்சி. குடும்பத்துக்கு அல்ல, நாடு தழுவியது. தமிழகத்தில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மறதியாக உள்ளார்கள். அதை போக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்தால் தான் தூய்மையான அரசியலை கொடுக்க முடியும். என்னை போல் மக்களும் பதற்றத்தோடு மாற்றம் வேண்டும் என்று ஆர்வத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளிடம் பேசி வருகிறேன். மதுவிலக்கை அரசால் மட்டுமே கொண்டு வர முடியாது. எல்லோரும் சேர்ந்து தான் அதை கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் சி.கே.பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசினார். 

Next Story