நாடாளுமன்ற தேர்தலில் ‘மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்’
‘வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்‘ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
சத்திரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியில் ம.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் பெ.பழனிச்சாமி-சங்கீதாவின் இல்ல புதுமனை புகுவிழா நடந்தது. இதில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் ஒவ்வொரு பிடிமண்ணும் தமிழனுக்கே சொந்தம். உலகம் முழுவதும் உள்ள 12 கோடி தமிழர்களின் உண்மையான தொண்டன் நான். அமதாபாத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் ஒற்றுமை மாநாட்டில் நான் ஆங்கிலத்தில் பேசியதை, அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடி குஜராத்தில் மொழி பெயர்த்து பேசினார்.
நாடு முழுவதும் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்பட அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இந்தியர்களே. அனைவரையும் அரவணைத்து செல்வது தான் ஜனநாயகம். நான் அண்ணா, காந்தி போன்றோர் காட்டிய அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறேன்.
தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்க வந்த துரோகி மோடியை, பதவியில் இருந்து அகற்ற தி.மு.க.வுடன் ம.தி.மு.க கூட்டணி அமைக்கிறது. புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
கேரளாவில் முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்ட மத்திய அரசு அனுமதியளித்தது. இதனால் திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் கர்நாடாகவில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதியளித்து இருப்பதன் மூலம், தமிழகத்தின் 18 மாவட்டங்கள் சீரழியும் நிலை உள்ளது. தேனி மாவட்டத்தை நியூட்ரினோ திட்டத்தின் மூலமும், தஞ்சையை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமும் மோடி அரசு அழிக்க நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் வரவேற்று பேசினார். விழாவில் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புலவர் செவந்தியப்பன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் ராக்கியண்ணன், பழனிச்சாமி, நகர செயலாளர் பரமானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமயந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story