கல்லூர் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
கல்லூர் கிராமத்திற்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா கல்லூர் கிராமத்தில் உள்ள 2 குடியிருப்புகளிலும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு நீண்ட காலமாக பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குடிநீர்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் நீரேற்றம் செய்வது தடைபட்டுள்ளது.
அந்த குடிநீர் தொட்டியின் அருகில் ஒரு குடிநீர் குழாய் மட்டும் அமைத்து அதில் தான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சில மணிநேரம் மட்டுமே வரும் குடிநீரை இந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் பிடித்து கொள்ள வேண்டும் என்ற அவலநிலை உருவாகிஉள்ளது. இதனால் இங்கு கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் மின்தடை ஏற்படும் போது குடிநீர் வினியோகம் தடைபட்டு விடுகிறது.
மேலும் தொட்டியில் நீரேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. குடிநீர் வினியோகம் நடைபெறும்போது தண்ணீரை பொது மக்கள் பிடிக்க முடியாவிட்டால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே இங்குள்ள நீர் தேக்க தொட்டியில் குடிநீர் நீரேற்றம் செய்து வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story