பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் கொளுத்தும் வெயிலில் நடந்த மனித சங்கிலி


பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் கொளுத்தும் வெயிலில் நடந்த மனித சங்கிலி
x
தினத்தந்தி 27 Jan 2019 10:00 PM GMT (Updated: 28 Jan 2019 12:18 AM GMT)

பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி சிவகாசியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசி,


விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு, பட்டாசு ஆலைகளை திறக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கஞ்சித்தொட்டி திறப்பு என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை சிவகாசி பஸ் நிலையம் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண் தொழிலாளர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் நீண்ட தூரம் கைகளை கோர்த்தபடி நின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சிவகாசி பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் 30 பேர் தாங்களாகவே முன்வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களுக்கும் பட்டாசு தொழிலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பாதிப்பில் இருந்து மீள அவர்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மனிதசங்கிலி போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டாசு தொழிலை பாதுகாக்க துணை நிற்பேன் என்று கூறிய பலர் இன்று காணாமல் போய்விட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தவில்லை. பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்து எந்த தகவலும் ஆலை உரிமையாளர்களுக்கு தரப்படவில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக கருதுகிறோம். பட்டாசு ஆலைகள் திறக்கப்படாத நிலையில் அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கூடங்களுக்குகூட செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளும் வகையில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்றனர். ஆனால் தொடர்ந்து 2 மாதத்திற்கு மேலாக பட்டாசு ஆலைகள் திறக்கப் படாமல் இருப்பதால் அந்த பெண் தொழிலாளர்கள் சுயஉதவிக் குழுக்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு ஆளான ஒரு பெண் தொழிலாளி கடந்த வாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதே நிலை நீடித்தால் தினம் ஒருவர் தற்கொலை சம்பவத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை எப்படி காப்பாற்றுவது? எனவே மத்திய, மாநில அரசுகள் பசுமை பட்டாசுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை ஏற்கனவே தயாரித்து வந்த பட்டாசுகளுக்கு தடை விதிக்க கூடாது, பட்டாசு ஆலைகளில் வழக்கமான பட்டாசுகளை தயாரிக்கலாம் என்றும் உத்தரவிடவேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சிவகாசி சுடுகாடாக மாறும் என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தொழிலாளி லட்சுமி (வயது 65) என்பவர் கூறுகையில்,

எனது கணவர் பொன்னுச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். என்னைப் போன்ற பல முதியவர்களுக்கு இந்த பட்டாசு ஆலைகள் பாதுகாப்பாக இருந்தன. வாழ்க்கையின் கடைசி காலக்கட்டத்தில் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்றார்.

பெண் தொழிலாளர் நாகஜோதி (35) கூறுகையில், 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வருகிறேன். எனது 2 குழந்தைகளை இந்த வருமானத்தால் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளேன். புதிய தொழில்களை உருவாக்க முடியாமல் இருக்கும் நிலையில் ஏற்கனவே உள்ள தொழில்களையாவது அரசு காப்பாற்றி எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து வாழ்வளிக்க வேண்டும் என்றார்.

வீரலட்சுமி என்பவர் கூறுகையில், ஆலைகள் திறக் கப்பட்டு வேலை கொடுத் தால் மட்டுமே மீண்டும் எங்களது வாழ்வு சிறக்கும். இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் சிவகாசிக்கு வேலைக்கு வந்த காலம் போய் தற்போது சிவகாசி தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மனவேதனையை தருகிறது என்றார்.

Next Story