‘நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்குங்கள்’ அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என்று அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர்,
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்த தேர்தல் சவாலான தேர்தல். எனவே தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்துக்கும் 18 பேர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். ஒரு பூத்தில் 1000 வாக்குகள் இருந்தால் ஒவ்வொரு 200 வாக்காளர்களுக்கும் தனியாக 6 பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
வருகிற 30-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. அதில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களில் யார்-யார் வருகிறார்களோ, அவர்களை கட்சியில் இணையுங்கள், அவர்களுக்குரிய கடமையை செய்வோம், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். கடலூர் கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை. நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சுட்டிக்காட்டுகிற வேட்பாளருக்கு வெற்றிதேடி தாருங்கள்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றி பெறச்செய்ததற்கும், பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து நடைமுறைபடுத்தியதற்கும், பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் காசிநாதன், பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், ஏ.கே.சுப்பிரமணியன், சி.கே.சுப்பிரமணியன், நகர துணைச்செயலாளர் கந்தன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் ஜெ.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், ஆர்.வி.மணி, ராமச்சந்திரன், புஷ்பநாதன் மற்றும் ஏழுமலை, வெங்கட்ராமன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story