கடலூர், குள்ளஞ்சாவடியில் நடந்த தனித்தனி விபத்தில் மாணவன் உள்பட 3 பேர் பலி


கடலூர், குள்ளஞ்சாவடியில் நடந்த தனித்தனி விபத்தில் மாணவன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 28 Jan 2019 5:48 AM IST (Updated: 28 Jan 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மற்றும் குள்ளஞ்சாவடியில் நடந்த தனித்தனி விபத்தில் மாணவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர், 

கடலூர் அருகே உள்ள எஸ்.புதூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் நவீன்(வயது 11). இவன் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

ராமலிங்கம், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன்கள் நவீன்(11), கைலாஷ் ஆகியோருடன் நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எஸ்.புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சுப்பிரமணியபுரம் அருகே வந்தபோது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நவீன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த ராமலிங்கம், உமாமகேஸ்வரி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கைலாஷ் காயம் இன்றி உயிர் தப்பினான். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மஞ்சக்குப்பம் அழகப்பாநகரை சேர்ந்தவர் வெங்கடாஜலம்(33). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, கரம்பையை சேர்ந்த மாரிமுத்து(30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வண்டிப்பாளையம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியது.

இதில் வெங்கடாஜலம், மாரிமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே வெங்கடாஜலம் பரிதாபமாக இறந்தார். மாரிமுத்துவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அதேபோல் கடலூர் தேவனாம்பட்டினம் பீச்ரோடு திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் மணி(வயது 60). ஜோதிடர். பாதிரிக்கப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த இவர் நேற்று அதிகாலை அங்குள்ள கடையில் டீ குடிப்பதற்காக நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 விபத்துகள் குறித்தும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story