அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் - 2,592 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் நீடித்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,592 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 28-ந் தேதி (நேற்று) பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு பணிக்கு செல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதையெல்லாம் பொருட் படுத்தாத ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று 7-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள அரசு ஊழியர்கள் 36 ஆயிரத்து 864 பேரில் நேற்று 26 ஆயிரத்து 106 பேர் பணிக்கு வந்தனர். 669 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 89 பேர் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தத்தில் 27.03 சதவீத அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஒரு சில அலுவலகங்களில் ஒன்றிரண்டு ஊழியர்களே பணிக்கு வந்திருந்ததால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதுபோல் இன்னும் பெரும்பாலான ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாததால் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியில் ஈடுபடுத்தியும் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்று வருபவர்களை அரசு பள்ளிகளில் பாடம் நடத்தவும் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளபோதிலும் பெரும்பாலான பள்ளிகள் ஒன்றிரண்டு ஆசிரியர்களை கொண்டு பெயரளவில் இயங்கியது. இதனால் மாணவ- மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தாங்களாகவே பாடம் நடத்தி படித்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆசிரியர்கள் 15 ஆயிரத்து 180 பேரில் 5 ஆயிரத்து 716 பேர் பணிக்கு வந்துள்ளனர். மருத்துவ விடுப்பில் 403 பேர் உள்ளனர். 59.69 சதவீத ஆசிரியர்கள் அதாவது 9 ஆயிரத்து 61 பேர் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவழகன், சின்னசாமி, நாராயணன், எழிலன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சரவணன், சிவக்குமார், ஜெயக்குமார், அய்யனார் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 1,018 பெண்கள் உள்பட 1,856 பேரை கைது செய்து அரசு பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சியிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ரகீம் தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 337 பெண்கள் உள்பட 736 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆக விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 1,355 பெண்கள் உள்பட 2,592 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story