அல்லப்பனூர் கிராமத்தில் மலையை உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


அல்லப்பனூர் கிராமத்தில் மலையை உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 4:55 PM GMT)

அல்லப்பனூர் கிராமத்தில் மலையை உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

கூட்டத்தில், தண்டராம்பட்டு தாலுகா அல்லப்பனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எங்கள் கிராமத்திற்கு மேற்கு மற்றும் கிழக்கில் மலைகளும், தெற்கே தென்பெண்ணை ஆறும் கொண்டதாகும்.

எங்கள் கிராமத்திற்கு வாழ்வாதாரமாக விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். இந்த நிலையில் மலைகளை உடைத்து வருவதால் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கு கூட இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, மலையை உடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆரணி தாலுகா அய்யம்பாளையம் மதுரா காந்திநகர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி தாலுகா அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், இந்திரா நகர், தேன்மலைப்பட்டி, சோமந்தாங்கல், பாளைய ஏகாம்பரநல்லூர், பாளையம் கொட்டாமேடு, சித்தேரி என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கிராமத்தை விட்டு வெளியே சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் எங்கள் கிராமத்திற்கு வேலூர் மற்றும் ஆரணியில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அப்படி வேலூர், திருவண்ணாமலை பஸ்சில் வரும் போது வண்ணாங்குளம் அல்லது சந்தவாசல் பகுதியில் நிறுத்தி பொதுமக்கள் மற்றம் பக்தர்களை இறக்கி விடுகின்றனர். அவர்கள் அங்கிருந்து கோவிலுக்கு அல்லது அவரவர் இருப்பிடத்திற்கு செல்வதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. எனவே, காந்திநகர் பகுதியில் வேகத்தடை அமைத்து பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story