வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

இதையடுத்து 28-ந் தேதி (அதாவது நேற்று) பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்கள் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறி மாணவிகள் பள்ளிக்கூடத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், ஆசிரியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். போராட்டமானது ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெறுகிறது. உங்களது கல்வி பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவது குற்றம் என்று கூறி மாணவிகளை சமாதானப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு, பள்ளி நுழைவுவாயில் முன்பும், விழுப்புரம் காந்தி சிலை அருகிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story