ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பட்டதாரி பெண்கள்
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அவர்கள் பணிக்கு வராததால், 2 பட்டதாரி பெண்கள் கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் கோட்டக்கரை அரசு பள்ளிக்கு பணியில் உள்ள 6 ஆசிரியர்களில் யாரும் நேற்று பள்ளிக்கு வரவில்லை.
52 மாணவ, மாணவிகள் நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். ஆனால் ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே திறந்து இருந்தது. கல்வித்துறை சார்பில் பாதிரிவேடு மேற்கு அரசு பள்ளியில் இருந்து வந்த முருகன் என்ற ஆசிரியர் மட்டும் பள்ளியில் இருந்தார்.
அவர் ஒருவரால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அரசால் நியமிக்கப்பட்ட அந்த ஆசிரியர் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்பறையில் பாடம் சொல்லிக்கொடுத்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிராம கல்விக்குழு நிர்வாகிகள், சூழ்நிலையை கருத்தில் கொண்டு மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் கல்வி கற்பதற்கான வழிமுறைகளை உடனடியாக செய்தனர்.
இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த வாசுகி, கீதப் பிரியா என்ற 2 பட்டதாரி பெண்கள் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாடம் எடுத்தனர்.
இதனை கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களும் தற்காலிகமாக பாடம் எடுத்த பெண் ஆசிரியர்களிடம் மிகுந்த பாசமுடன் கல்வி பயின்றனர்.
Related Tags :
Next Story