ஊட்டியில் நாளை மறுநாள் அறிவியல் கருத்தரங்கம் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருது


ஊட்டியில் நாளை மறுநாள் அறிவியல் கருத்தரங்கம் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருது
x
தினத்தந்தி 28 Jan 2019 11:00 PM GMT (Updated: 28 Jan 2019 7:00 PM GMT)

ஊட்டியில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருது வழங்குகிறார்.

ஊட்டி,

தமிழ்நாடு மாநில மண் வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியுமான டாக்டர் மணிவண்ணன் நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார். மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.

கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர். தற்போது ஏற்பட்டு உள்ள காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் நாட்கள் குறைவதும், ஒரே நேரத்தில் அதிகமாக மழை பொழிவதும், பனி அதிகமாவதும், வெப்பம் அதிகரிப்பது, வெப்ப காற்று அதிகமாவது போன்றவை குறித்து கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

கருத்தரங்கிற்கு பின்னர் உருவாக்கப்படும் திட்ட அறிக்கைகள் அரசு மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். ஊட்டியில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் முதல் முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் கோலா உடனிருந்தார்.

Next Story