கோவில்பட்டியில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்


கோவில்பட்டியில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தி, கோவில்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள் பணிக்கு வராததால், சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 86 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக உமா மகேசுவரி, ஆசிரியைகளாக குணவதி, மாரியம்மாள் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 5 நாட்களாக எந்த ஆசிரியரும் பணிக்கு வரவில்லை. இதனால் தினமும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து, கல்வி கற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்றும் அந்த பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள், உடனே ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி, பள்ளிக்கூடத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து தாங்களாகவே படித்து சென்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “குடியரசு தின விழா தினத்தன்று காலையில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் தேசிய கொடியேற்றினர். பின்னர் மாலையில் ஆசிரியர்கள் இல்லாததால், தேசிய கொடியை மாணவர்கள்தான் இறக்கினர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்றனர்.

Next Story