ஆசிரியர் பணிக்கு வராததை கண்டித்து 4 இடங்களில் பெற்றோர், மாணவர்களுடன் மறியல்
திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
தமிழகத்தில் கடந்த 22–ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூரில் 4 இடங்களில் பெற்றோர், மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அது பற்றிய விவரம் வருமாறு:–
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் 470 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் இந்த பள்ளி கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் இன்று திறப்பார்கள், நாளை திறப்பார்கள் என ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று காலை 10 மணியளவில் பெரியாயிபாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே திரண்டனர். அங்கு மாணவ–மாணவிகளுடன் திருப்பூர்–அவினாசி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தொடக்க கல்வி அலுவலர் ஜோதிபிரகாஷ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் தினமும் மாணவர்கள் வந்து ஏமாற்றம் அடைகின்றனர் என்றனர்.பின்னர் இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் காரணமாக அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டி வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் 194 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தொடக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்று இருப்பதை கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கே.செட்டிபாளையம் தொடக்க பள்ளி அருகே தாராபுரம் ரோட்டில் பள்ளி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கோரி கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெற்றோரை சமாதானம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போன்று காங்கேயம் ரோடு, விஜயாபுரம் அரசு தொடக்க பள்ளி நேற்று காலை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் ஒத்தக்கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் மாணவர்களுடன் கலந்து கொண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு மாணவர்கள், பெற்றோர் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜாக்டோ–ஜியோ போராட்டம் காரணமாக பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தட்டாங்குட்டை, அப்பியாபாளையம் நடுநிலைப் பள்ளிகளில் குறைந்த ஆசிரியர்களே பணிக்கு வந்திருந்தனர். மொய்யாண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியும், ஈட்டிவீரம்பாளையம் நடுநிலைப்பள்ளியும், பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் மூடப்பட்டன. இதனால் பள்ளிகளுக்கு வந்த மாணவ–மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் கணக்கம்பாளையம் பொன் விழா காலனி தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து கணக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.