தஞ்சை அகழியில் 60 ஆண்டுகளாக இருந்த வீடுகள் அகற்றம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


தஞ்சை அகழியில் 60 ஆண்டுகளாக இருந்த வீடுகள் அகற்றம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்காக தஞ்சை அகழியில் 60 ஆண்டுகளாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி “ஸ்மார்ட் சிட்டியாக” அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாநகரில் “ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் ரூ.1,289 கோடி மதிப்பில் நடைபெற உள்ளன. இதில் தஞ்சை மாநகரை அழகுபடுத்துவது, சாலைகளை சீரமைப்பது, குடிநீர் வசதிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 12 வகையான பணிகள் அடங்கும்.

“ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தஞ்சை மாநகரில் உள்ள அகழி பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தஞ்சை பெரிய கோவில் பின்புறம் அமைந்துள்ள சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டன. இதன்பின்னர் தஞ்சை வடக்குவாசல் பகுதி, தஞ்சை கீழ்அலங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு வல்லம் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தஞ்சை கீழ் அலங்கம் பகுதியில் கொடிமரத்து மூலையில் இருந்து வெள்ளைவிநாயகர் கோவில் வரை அகழியை ஒட்டி உள்ள வீடுகள் நேற்று அகற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மாநகராட்சி சார்பில் வீடுகளை தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ளும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று அந்த பகுதியில் வசித்தவர்கள் தாமாக முன்வந்து தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து சென்றனர். அதன் பின்னர் அங்கு இருந்த வீடுகள் 2 பொக்லின் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இது குறித்து அங்கு வசித்து வந்த பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். இங்கு 125 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவருக்கும் இந்த பகுதி தான் நிரந்தர முகவரியாக அனைத்து ஆவணங்களிலும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வீடுகளை அகற்றப்போவதாக மாநகராட்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

தாமாக முன் வந்து வீடுகளை அகற்றி கொள்ளவில்லை என்றால் இடித்து தள்ளிவிடுவதாகவும், அதற்கான செலவு தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறி இருந்தனர்.

இதனால் நாங்களாகவே முன்வந்து வீடுகளை அகற்றி கொண்டோம். வல்லம் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் குடியிருப்பதற்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வீடுகள் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அரசு பொதுத்தேர்வு வரவுள்ளது.

இந்த நேரத்தில் திடீரென வீடுகள் அகற்றப்படுவதால் இங்கு வசித்த மாணவர்களின் மனநிலை பாதிப்படைந்துள்ளது. தஞ்சையில் இருந்து நீண்ட தூரத்தில் பிள்ளையார்பட்டி உள்ளது. இதனால் மாணவர்கள் தஞ்சையில் உள்ள பள்ளிகளுக்கு வருவதற்கு சிரமப்படுவார்கள். வீடுகளை அகற்றிக்கொள்வதற்காக நாங்கள் கேட்ட அவகாசத்தையும் மாநகராட்சி தரவில்லை. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இந்த நிலையில் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story