பெலகாவி அருகே கார் மோதி தந்தை-மகன் படுகாயம் 12 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று டிரைவரை பிடித்த வாலிபர்கள்
பெலகாவி அருகே கார் மோதி தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர். காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற டிரைவரை 12 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று வாலிபர்கள் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா சடல்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த் நாயக்(வயது39). இவரது மகன் கிருஷ்ணா நாயக்(14). தந்தையும், மகனும் சடல்கா மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், ஆனந்த் நாயக், அவரது மகன் மீது மோதியது. இதனால் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் ஓடிவந்தனர். உடனே காரை அங்கிருந்து வேகமாக டிரைவர் ஓட்டிச் சென்றார். இதையடுத்து, உயிருக்கு போராடிய தந்தை, மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
12 கிலோ மீட்டர் தூரம்...
இதற்கிடையில், காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற டிரைவரை, சில வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர். பின்னர் விபத்து நடந்த பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து காரை வாலிபர்கள் மடக்கிப்பிடித்தனர். அப்போது சிலர் காரை கற்களால் தாக்கி உடைத்தார்கள்.
இதுபற்றி அறிந்ததும் அங்கு விரைந்து வந்த சடல்கா போலீசாரிடம், கார் டிரைவர் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெயர் விட்டல் பூததாரா(30) என்று தெரியவந்தது. கைதான அவர் மீது சடல்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story