கோவை இருகூரில் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு


கோவை இருகூரில் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை இருகூரில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிங்காநல்லூர், 

கோவை அருகே உள்ள இருகூர் கே.ஜி. போஸ் நகரை சேர்ந்தவர் பிரசன்ன பாபு (வயது 37), தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பிரசன்னபாபு கடந்த 24-ந் தேதி தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் சென்றார். பின்னர் அவர் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. அத்துடன் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகையை காணவில்லை.

மேலும், வீட்டில் வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது பிரசன்னபாபு வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடிச்சென்று, அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் படுத்துக்கொண்டது.

அந்த வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அங்கு இளைஞர்கள் சிலர் தங்கி இருப்பதும், அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், அவர்களுக்கும், இந்த திருட்டுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுபோன்று கோவை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் தனியார் ஸ்டுடியோ உள்ளது. இந்த ஸ்டுடியோ கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் குத்துவிளக்கை திருடிச்சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இது குறித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து இங்கு கைவரிசை காட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story