பெலகாவி அருகே, 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் உள்பட 3 பேர் சாவு தாய்-மகள் படுகாயம்


பெலகாவி அருகே, 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் உள்பட 3 பேர் சாவு தாய்-மகள் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா வடராலா கிராமத்தை சேர்ந்தவர் லகுவண்ணா, கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (32). இவர்களது மகள் ஜீனவ்வா (11). நேற்று முன்தினம் இரவு லட்சுமி தனது மகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது வடராலா கிராமத்தை சேர்ந்த பீமப்பா(62) என்பவரின் மோட்டார் சைக்கிளில் லட்சுமியும், அவரது மகளும் ஏறி வந்தனர். சிக்கோடி மெயின் ரோட்டில் அவர்கள் 3 பேரும் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், பீமப்பாவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பீமப்பா, லட்சுமி, ஜீனவ்வா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார்கள். அதுபோல மற்றொரு மோட்டார் சைக்கிளில்இருந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.

3 பேர் சாவு

இதுபற்றி அறிந்ததும் சிக்கோடி போலீசார் விரைந்து வந்து 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பீமப்பா, மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சிஞ்சனி கிராமத்தை சேர்ந்த சங்கர் (31), பிரவீன் பட்டீல்(30) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். உயிருக்கு போராடி வரும் லட்சுமி, அவரது மகள் ஜீனவ்வா மேல் சிகிச்சைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story