மாவட்டத்தில் 60 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
சேலம் மாவட்டத்தில் 60 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறினார்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 18 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பாடம் கற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையே காணப்படுவதால் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த சில நாட்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
நேற்று 3-வது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சில பெண்கள், தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அங்கிருந்தவர்களிடம் அளித்தனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 500 பேர் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த 25-ந் தேதி ஆசிரியர்களின் வருகைப்பதிவு 43 சதவீதமாக இருந்தது. போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் சிலர் தங்களது பள்ளிகளுக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு வருகிறார்கள். அதேசமயம், தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இதுவரை 3 ஆயிரத்து 500 விண்ணப்பம் வந்துள்ளது. அவற்றில் ஆசிரியர் தகுதிதேர்வு முடித்தவர்கள் யார்? முடிக்காதவர்கள் யார்? என அவர்களது கல்வித்தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களை தரம் பிரிக்கும் பணிகளில் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை தற்காலிக ஆசிரியர்கள் யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசின் ஆலோசனைப்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் மாணவ-மாணவிகளின் நலன்கருதி ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story