ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தம் எதிரொலி கூடலூர் பகுதியில் பல அரசு பள்ளிகள் மூடப்பட்டன
ஆசிரியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக கூடலூர் பகுதியில் பல அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
கூடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ- ஜியோ) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் வருவாய், தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி, கால்நடை உள்பட அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அரசு அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததன் எதிரொலியாக மாணவ-மாணவிகள் வருகையும் குறைந்து வருகிறது.
ஆசிரியர்கள் மட்டுமின்றி தலைமை ஆசிரியர்களும் பணிக்கு வருவது இல்லை. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பெரும்பாலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடியே கிடக்கின்றன. காலையில் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கூடலூர் அத்திப்பாளியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் மாணவ-மாணவிகள் வந்தனர். அப்போது ஆசிரியர்களும் இல்லை. மேலும் பள்ளியும் மூடப்பட்டு இருந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் வெகுநேரம் காத்து நின்றனர். தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கூடலூர் 2-ம் மைல் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பூட்டி கிடந்தது. அப்போது பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் வருகைக்காக காத்திருந்தனர். இதை அறிந்த பெற்றோர் அங்கு வந்தனர். பின்னர் மாணவ-மாணவிகளுடன், பெற்றோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படவில்லை.
இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசுக்கும், அரசு ஊழியர்கள் சங்கங்களுக்கும் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் கோரிக்கைகளை ஏற்க இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை கண்டித்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்தது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஆசிரியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால், பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தேர்வு காலம் நெருங்கி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே அரசும், அரசு ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story