அரசு பஸ்சை சரியான நேரத்துக்கு இயக்க கோரிக்கை பழைய அருவங்காடு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
அரசு பஸ்சை சரியான நேரத்துக்கு இயக்க வேண்டும் என்று பழைய அருவங்காடு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சரியான நேரத்துக்கு இயக்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழைய அருவங்காட்டில் இருந்து குன்னூருக்கு ஓட்டுபட்டரை வழியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக சரியான நேரத்துக்கு பஸ் வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதி வழியாக மற்ற பஸ்களும் இயக்கப்படாததால், நாங்கள் அந்த அரசு பஸ்சை மட்டும் நம்பி இருந்தோம்.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பழைய அருவங்காடு-அருவங்காடு, எல்லநள்ளி, உபதலை போன்ற வழிகளில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் ஜீப், ஆட்டோ போன்றவற்றுக்கும் ரூ.150 வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். மேலும் பழைய அருவங்காடு-ஊட்டிக்கு பஸ் இயக்கப்படாததால், எல்லநள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. சாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
எனவே பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊட்டி மற்றும் குன்னூரில் இருந்து பழைய அருவங்காடு பகுதிக்கு சரியான நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும். பஸ் எடுக்கும் நேரம் அடிக்கடி மாறுபடுவதால், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு காத்திருப்பதற்கு பஸ் அட்டவணையை பஸ் நிறுத்துமிடத்தில் ஒட்ட வேண்டும். மேலும் அரசு பஸ்சை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே காந்திப்பேட்டை பொதுமக்கள் அளித்த மனுவில், காந்திப்பேட்டையில் தோடர் இன மக்களும், கிறிஸ்தவர்களும் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். எங்களது ஊருக்கு செல்லும் வழியை தனிநபர்கள் தங்களுக்கு சொந்தமான வழி என்று கூறி தடுப்பு வேலி அமைத்து உள்ளனர். இதுகுறித்து நாங்கள் மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்து இருந்தோம். இதுசம்பந்தமாக தாசில்தார் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே லவ்டேல் போலீசாருடன் சிலர் அப்பகுதிக்கு வந்து சாலையை அடைத்து, கேட் அமைத்து பூட்டு போட்டு உள்ளனர். போலீசாருடன் தனிநபர்கள் எங்களை மிரட்டுகின்றனர். ஆகவே எங்களுக்கு வழி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
எல்லநள்ளி கிராம தலைவர் கங்காதரன், செயலாளர் மணி மற்றும் மக்கள் கொடுத்த மனுவில், எல்லநள்ளி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலை மூலம் மக்களுக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சிலர் தொழிற்சாலைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார்களை அளித்து வருகின்றனர். அவர்கள் அளித்த புகாரில் எங்கள் கிராமத்தையும் சேர்த்து உள்ளனர். இது தவறு. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
உலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் பாரதிநகர் பொதுமக்கள் அளித்த மனுவில், அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு 150 இளைஞர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கீழ் பாரதிநகரில் ஒரு சிறிய இடத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது அந்த இடம் தனியார் நிர்வாகத்துக்கு சொந்தமானது என்று கூறி, அப்பகுதியில் தேயிலை நாற்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆகவே அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story