நீர்நிலைகளை பாதுகாக்க 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஜே.சி.பி. எந்திரம் கலெக்டர் தகவல்


நீர்நிலைகளை பாதுகாக்க 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஜே.சி.பி. எந்திரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்க 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஜே.சி.பி. எந்திரம் வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கையை அடுத்த அலவாக்கோட்டையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:– ஊராட்சிகள் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஊராட்சிப் பகுதியில் நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களை ஆண்டுதோறும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். வரத்துக்கால்வாய் சீராக இருந்தால் தான் குறைந்த அளவு மழைநீரை கூட சேமித்து பயன்படுத்த முடியும்.

அதேபோல் மகளிர்குழு அமைத்து சுயதொழில் தொடங்க இதுபோன்ற கூட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஊராட்சியில் தேவையான குடிநீர் திட்டப் பணிகள், சாலை வசதிகள், நூலக கட்டிடம் மற்றும் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு கூட்டத்தின் வாயிலாக தீர்மானித்து பணியமைத்து மேற்கொள்ளலாம்.

கிராமசபைக் கூட்டத்தின் வாயிலாக வறுமையில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு பசுமைவீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வது போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்க 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஜே.சி.பி. எந்திரம் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது. அதை வைத்து அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும். எனவே, இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, உதவி இயக்குனர் விஜயநாதன், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ரஞ்சனிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story