மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர் அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 சதவீதம் பேர் நேற்று பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7,634 ஆசிரியர்களில் நேற்று காலை நிலவரப்படி 3,696 பேர் பணிக்கு வரவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்.
இல்லை எனில் அவர்கள் பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து நேற்று பிற்பகலுக்கு மேல் ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 சதவீதம் பேரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 70 சதவீதம் பேரும் பணிக்கு வந்து விட்டதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறினர்.
இதற்கிடையே தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேற்று முன்தினம் வரை 1,810 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். நேற்று மேலும் 1,700 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். எனவே தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை விண்ணப்பித்து உள்ள நபர்களின் எண்ணிக்கை 3,510 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்களில் முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 59 ஆசிரியர்களின் பணியிடங்கள், தற்காலிக ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப கடிதம் பெறப்பட்டு நிரப்பப்பட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களை பொறுத்த வரையில் நேற்று மொத்தம் 13 ஆயிரத்து 43 பேரில் 342 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசு ஊழியர்கள் 15 பேரை நேற்று அந்தந்த துறைகளின் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story