தேவேகவுடா குடும்பம் பற்றி காங். எம்.எல்.ஏ. விமர்சனம் கட்சி மேலிடம் கட்டுப்படுத்தாவிட்டால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் குமாரசாமி எச்சரிக்கை-பரபரப்பு


தேவேகவுடா குடும்பம் பற்றி காங். எம்.எல்.ஏ. விமர்சனம் கட்சி மேலிடம் கட்டுப்படுத்தாவிட்டால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் குமாரசாமி எச்சரிக்கை-பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 11:30 PM GMT (Updated: 28 Jan 2019 8:16 PM GMT)

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

கூட்டணி ஆட்சியை...

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். கூட்டணி மந்திரிசபையில் காங்கிரசுக்கு 22 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 மந்திரிகளும் உள்ளனர்.

ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை பா.ஜனதா தொடர்ந்து நடத்தி வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பா.ஜனதா குற்றம்சாட்டியது

சமீபத்தில் பா.ஜனதாவின் 104 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) முயற்சி செய்வதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது.

இதையடுத்து காங்கிரஸ் தனது 76 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட் ஓட்டலில் தங்க வைத்தது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க் களை பணம் கொடுத்து இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

எங்கள் முதல்-மந்திரி

இந்த ரெசார்ட் அரசியல் சில நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் கனக பவன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். மந்திரிகள் புட்டரங்கஷெட்டி, எம்.டி.பி.நாகராஜ் மற்றும் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். அவர்கள் பேசுகையில், சித்தராமையா தான் எங்கள் முதல்-மந்திரி என்று கூறினர்.

பதவி விலக தயார்

மேலும் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பேசுகையில், “சிலர் குடும்பத்தில் மகன், மருமகளுக்கு பதவிகளை வழங்குகிறார்கள். ஆனால் முதல்-மந்திரியாக இருந்தபோது, சித்தராமையா அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் பதவி வழங்கினார். பெங்களூரு நகரின் வளர்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி அக்கறை செலுத்தவில்லை. கூட்டணி அரசு அமைந்து 7 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை” என்று கடும் அதிருப்தியை வெளிப் படுத்தினார். தேவேகவுடா குடும்பத்தை பற்றி மறைமுகமாகவும் தாக்கி பேசினார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் இதுபற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த குமாரசாமி, “காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவதை கவனிக்க வேண்டும். அது அவர் களுக்கு விடப்பட்ட விஷயம். இதுபற்றி என்னால் கேட்க இயலாது. அது எனக்கு தொடர்புடையது கிடையாது. காங்கிரஸ் தான் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்த வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் இதுபோல் தொடர்ந்து பேசுவதை காங்கிரஸ் விரும்பினால், நான் பதவியை ராஜினாமா செய்வேன். காங்கிரஸ் தலைவர்கள் இதுபற்றி அவசியம் ஆலோசிக்க வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரம்பு மீறுகிறார்கள்” என்று கோபத்துடன் கூறிவிட்டு சென்றார்.

நிர்வாகம் முடங்கிவிட்டது

குமாரசாமியின் இந்த கருத்து, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், “கூட்டணி அரசு பற்றி விமர்சனம் செய்ய எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு பேசுவது தவறு. எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ.க்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும்” என்றார்.

இதுகுறித்து பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரசின் தலையீடு இருப்பதை குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் தான் பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறி இருக்கிறார். கூட்டணியில் மோதல் இருப்பதை குமாரசாமி பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதனால் பா.ஜனதாவை பற்றி குறை கூறுவதை குமாரசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் ஆட்சி அதிகார தாகத்தால், மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டது” என்று கூறப்பட்டு உள்ளது.

நம்பிக்கை வைத்துள்ளது

இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் மேலிடம், கூட்டணி அரசு மற்றும் முதல்-மந்திரி மீது முழு நம்பிக்கையை வைத்துள்ளது. இந்த அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்த காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்” என்றார்.

Next Story