சிறுமுகை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல், தொழிலாளி பரிதாப சாவு


சிறுமுகை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல், தொழிலாளி பரிதாப சாவு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் சிறுமுகை சின்னக்கள்ளிப்பட்டி அடுத்து உள்ள தாசகாளியூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 38). தொழிலாளி. நேற்று மாலை வெள்ளிங்கிரி மற்றும் சின்னக்கள்ளிப்பட்டி கல்லக்கரையை சேர்ந்த ராமசாமி (48), சங்கர் (36), ஆகிய 3 பேரும் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மது குடித்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

சங்கர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். மாலை 6 மணியளவில் சிறுமுகை-சத்தி மெயின் ரோட்டில் பெத்திக்குட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த ராமசாமி, சங்கர் மற்றும் காரில் வந்த சிறுமுகை காந்தி நகரை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (40), மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோடு நடூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (49), நடராஜ் (65), சிறுமுகை காந்தி நகரை சேர்ந்த சரோஜா (45) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story