தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு
வேலூர் சேண்பாக்கத்தில் நடந்த தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.
அதில், இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, கடனுதவி, முதியோர் உதவித்தொகை, பொது நல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கலெக்டர் ராமன் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கு சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
சேண்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேரின் குடிசைகள் எரிந்தன. இதில், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் கருகி நாசமானது. தற்போது நாங்கள் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு அரசு திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வேலூர் மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்களை மர்மநபர்கள் வழிமறித்து தாக்கி பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகளுக்கும், ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நெமிலி பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள் அளித்த மனுவில், நாங்கள் அனைவரும் காவேரிப்பாக்கம் ஏரியில் கூலிக்கு மீன் பிடித்து வருகிறோம். அந்த ஏரியினை காவேரிப்பாக்கம் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் குத்தகை அடிப்படையில் மீன் பிடிக்கின்றனர். அந்த கூட்டுறவு சங்கத்தில் எங்களை உறுப்பினராக சேர்க்க மறுக்கின்றனர்.
எங்களை உறுப்பினராக சேர்க்கும் பட்சத்தில் மானிய விலையில் அரசு மூலம் கிடைக்கும் வலை, பரிசல், இலவச வீடு மற்றும் இதர சலுகைகள் எங்களுக்கு கிடைக்கும். இதன்மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே எங்களையும் காவேரிப்பாக்கம் கூட்டுறவு மீனவர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறியிருந்தனர்.
வாலாஜாபேட்டை நரிக்குறவர்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் அங்கு உள்ளன. எனவே எங்களுக்கு அங்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story