மாவட்டம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரம் பேர் விண்ணப்பம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
வேலூர் மாவட்டம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.
வேலூர்,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்றும், மாலைக்குள் பணிக்கு வராவிட்டால் அவை காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் ஆசிரியர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று காலை ஆசிரியர்களின் வருகை குறித்து நேரில் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் நேற்று 65 சதவீதம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், 23 சதவீதம் தொடக்க, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாலை 6 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாக பணியில் சேரும் ஆசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.
பணியில் சேராத ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை ஆசிரியர் பணியில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களையும் தற்காலிக ஆசிரியர் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story