போராட்டம் நடத்திய மாணவர்களை சமரசம் செய்து ஆசிரியராக மாறி பாடம் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்
ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமரசம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வகுப்பறையில் ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மற்ற பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்கள் நடத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே அம்மூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நேற்று காலை 9.30 மணி வரை திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் வகுப்புகளை உடனே திறக்கக் கோரியும், ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்த வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தும் பள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த வாலாஜா தாசில்தார் பூமா மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை சமாதானமடைய செய்தனர். பின்னர் பூட்டை உடைத்து வகுப்பறையை திறந்து விட்டனர்.
அங்கு வந்திருந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் வகுப்பறைக்கு சென்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு திருக்குறள் பாடம் நடத்தினார். கற்க கசடற, தொட்டனைத்தூறும் மணற்கேணி என்பன உள்பட திருக்குறள்களை கூறி அதன் அர்த்தத்தையும் மாணவர்களுக்கு கூறி பாடம் நடத்தினார்.
மாணவர்களின் போராட்டத்தை சமரசம் செய்து ஆசிரியரை போல் பாடம் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story