தேனியில் சாலை மறியல், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 1,639 பேர் கைது
தேனியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் சாலை மறியல் செய்தனர். அவர்களில் 1,639 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. வேலை நிறுத்தம் செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியலை தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தேனி நகரில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பஸ் நிலையம், பிரதான சாலைகள், ஆட்டோ நிறுத்தங்கள், இணைப்புச் சாலைகள் என பல இடங்களில் போலீசார் நின்று கொண்டு இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறி, பஸ் நிலையத்தில் பஸ்களில் வந்து இறங்கிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பிடித்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
ஆசிரியர்கள் ஆட்டோக் களில் இருந்து இறங்கிய போதே கைது செய்தனர். சாலையோரம் டீக்கடை, மரத்தடி நிழலில் நின்று கொண்டு இருந்தவர்களையும் அரசு ஊழியர்களா? ஆசிரியர்களா? என விசாரித்து கைது செய்தனர். இதனால் காலை நேரத்திலேயே தேனியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நகரில் ஆங்காங்கே போலீசார் நின்று கைது செய்த வண்ணம் இருந்தனர். சில இடங்களில் பொதுமக்கள், கூலி வேலைக்கு சென்றவர்களையும் போலீசார் பிடித்து வாகனங்களில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அரசு ஊழியரோ, ஆசிரியரோ இல்லை என்று உறுதி செய்து அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில், நேரு சிலை சிக்னல் அருகில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தமாக திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆசிரியர் ஒருவர் தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
மறியலின்போது, அங்கு அ.தி.மு.க.வின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் மறியல் செய்தவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சிலரும் அங்கு வந்துள்ளனர். திடீரென ஆசிரியர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினர் சிலர், ஆசிரியர்கள் போராட்டத்தால் தங்களின் பிள்ளைகள் பள்ளிகளில் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்து அ.தி.மு.க.வினரை அங்கிருந்து கலைத்து விட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மறியல் செய்த சங்க நிர்வாகிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். இதனால் போலீசாரை கண்டித்து கண்டன கோஷங் கள் எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி, தேனி, வீரபாண்டி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
நேரு சிலை சிக்னல் பகுதியில் மறியல் செய்த சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் நேற்று 1,100 பெண்கள் உள்பட 1,639 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்து திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்கள் அங்கிருந்தபடியே கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story