‘மோடிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த நிதின் கட்கரி முயற்சிக்கிறார்’ தேசியவாத காங்கிரஸ் கருத்து


‘மோடிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த நிதின் கட்கரி முயற்சிக்கிறார்’ தேசியவாத காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 29 Jan 2019 4:13 AM IST (Updated: 29 Jan 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த நிதின் கட்கரி முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மும்பை,

மத்திய மந்திரி நிதின் கட்கரி நேற்று முன்தினம் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள் பொது மக்களிடம் அடி வாங்குவார்கள் என்றார். மத்திய மந்திரியின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அவர் கடந்த மாதம் புனேயில், தேர்தல் தோல்விகளுக்கு தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியிருந்தாா். அந்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மோடிக்கு மாற்று

இந்தநிலையில் நிதின் கட்கரியின் பேச்சு குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கருத்து தெரிவித்து உள்ளன.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-

3 மாநில தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பிறகு நிதின் கட்கரி பேசி வருவதை பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடியும், பா.ஜனதா அரசும் இருக்காது என்பதை உணர்த்துகிறது. மோடியின் தோல்விகளால் அவருக்கு எதிராக பா.ஜனதாவில் இருந்தே குரல் வருகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைய உள்ள நிலையில், நிதின் கட்கரி தன்னை மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த முயற்சி செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடிகொடுக்க மக்கள் ஆர்வம்

நாக்பூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஆஷிஸ் தேஷ்முக் கூறும்போது, நிதின் கட்கரி பொய் பேசி வருகிறார். விதர்பா தனி மாநிலம், அம்பாசாரி ஏரியில் கடல் விமான திட்டம் போன்ற எந்த வாக்குறுதிகளையும் நிதின் கட்கரி நிறைவேற்றவில்லை.

விவசாய திட்டம், இளைஞர்கள் வேலை வாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், சுற்றுலா, கல்வி, மருத்துவ சேவை என பல்வேறு துறைகளில் போலி வாக்குறுதிகளை அளித்த நிதின் கட்கரிக்கு அடி கொடுக்க நாக்பூர் மக்கள் ஆர்வமாக உள்ளனர், என்றார்.

Next Story