நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள் 2-வது பெரிய மாநிலத்தின் நிலவரம் என்ன?


நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள் 2-வது பெரிய மாநிலத்தின் நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 29 Jan 2019 4:19 AM IST (Updated: 29 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவு பெற இருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி வரவேற்க தொடங்கி உள்ளன. நாட்டு மக்களும் நாடாளுமன்ற தேர்தலை விவாதத்துக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக தொகுதிகள். அங்கு 80 தொகுதிகள் இருப்பதால், நாட்டை ஆளத்துடிக்கும் கட்சிகளின் அதீத பார்வை அந்த மாநிலத்தின் மீது எப்போதுமே விழுகிறது. அந்த வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி தொடர்பாக அந்த மாநிலத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டி இருக்கிறது. இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி கரம் கோர்த்து விட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட, கடந்த தேர்தலில் 71 தொகுதிகளை அள்ளி ஆட்சி மகுடம் சூட்டிக்கொண்ட பா.ஜனதாவும் பதறி போய் நிற்கிறது.

தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேவேகவுடா பாணியில் பிரதமர் பதவியை கைப்பற்றுவது அல்லது பெரும்பான்மை பலம் இன்றி யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் மீது சவாரி செய்வது தான் மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் திட்டம்.

இந்த மாநிலத்தை குறிவைத்து காங்கிரசில் திடீரென பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டு விட்டதை போல வேறு என்ன அதிசயம் நடக்கபோகிறது என்பது எல்லாம் போகப்போக தெரியும்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 2-வது பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு 48 தொகுதிகள் உள்ளன. இதனால் இந்த மாநிலத்தையும் தேசிய கட்சிகள் குறிவைக்கின்றன.

இந்த மாநிலத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என மாநில கட்சிகளும் கோலோச்சி வருகின்றன.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 42 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 23 தொகுதிகளை கைப்பற்றி மோடி அரியணை ஏற மராட்டியம் உதவியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 6 இடங்களில் மட்டுமே தடம் பதித்தது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியவற்றில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முந்திக்கொண்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. இருகட்சிகளும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினிலும் சில தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு விட்டு கொடுத்து மகா கூட்டணிக்கும் ஆயத்தமாகி வருகிறது.

ஆனால் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசில் அங்கம் வகித்து கொண்டு இருக்கும் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு போக்கு காட்டி வருகிறது.

அவர்கள் (காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூடி விட்டார்கள், இதனால் நாமும் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் தேர்தல் முடிவு எதிர் அணிக்கு சாதகமாகி விடும் என்று பா.ஜனதா கூவி கூவி பார்க்கிறது. சிவசேனாவோ டிமிக்கி கொடுத்து வருகிறது.

காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைத்தே போட்டியிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மராட்டியத்தை பொறுத்தவரை நாங்கள் தான் பெரிய அண்ணன். எனவே எங்களுடன் கூட்டணி பேச பா.ஜனதா தான் முன்வர வேண்டும் என்று சிவசேனா அதிரடியாக அறிவித்து உள்ளது.

இதுஒருபுறம் இருக்க அரசில் அங்கம் வகித்து கொண்டே மோடிக்கு எதிராக பேசுவதையும் சிவசேனா நிறுத்தி கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியோ பா.ஜனதா அரசு மீது ரபேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த, அதைபோலவே மத்திய அரசின் பயிர்காப்பீட்டு திட்டத்திலும் மகா ஊழல் நடந்து இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவ்வப்போது புகழ்ந்து வந்த சிவசேனா, புதிதாக அரசியலுக்கு வந்த பிரியங்கா காந்தியையும் வரவேற்க தயங்கவில்லை. இதற்காக காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி சேரப்போவதும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்த சிவசேனாவின் நிலைப்பாடு புதிராக தான் உள்ளது.

போகப்போகத் தான் தெரியும், நாடாளுமன்ற தேர்தலில் நாற்பத்து எட்டு தொகுதிகளை கொண்டுள்ள மராட்டியம் மத்தியில் ஆட்சியமைக்க யாருக்கு உதவும் என்று!.

Next Story