கடலூர், காட்டுமன்னார்கோவில், சி.முட்லூரில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கடலூர், காட்டுமன்னார்கோவில், சி.முட்லூரில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது. இந்த போராட்டத்தையொட்டி பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களின் இந்த போராட்டத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்து போ ராடி வருகின்றனர்.
அதன்படி ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலூர் செம்மண்டலம் கே.என்.சி. மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலையை பறிக்கும் அரசாணையை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் நந்தினி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 22-ந் தேதி முதல் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக மாணவிகள், தாங்களாகவே வகுப்பறையிலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. இதனால் பாடங்களில் உள்ள சந்தேகங்களை கேட்க முடியவில்லை. எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்றி மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் அரசு பேசி வருகிறது என்றனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை செயலாளர் சிலம்பரசன் தலைமையில் மாணவ-மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, தங்களது வீட்டிற்கு சென்றனர்.
Related Tags :
Next Story