சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நிலத்தை மீட்டுத்தர கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 53), விவசாயி. இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது ரத்தினவேல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்தனர். பின்னர் அவரிடம் இருந்த கேனை பிடுங்கி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரத்தினவேல் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு 13 சென்ட் நிலம் உள்ளது. பணம் தேவைப்பட்டதால் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சென்டிற்கு ரூ.17 ஆயிரம் வீதம் வாங்கிக்கொண்டு, பணத்தை திரும்ப கொடுக்கும் போது நிலத்தை வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் நிலத்தை கிரயம் செய்து கொடுத்தேன்.
இதையடுத்து நான் அவரிடம் மீண்டும் பணத்தை திருப்பி கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தை வாங்காமல் நிலத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக நான் ஏற்கனவே மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த நபரிடம் 5 மாதத்திற்குள் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். ஆனால் நான் பணத்தை கொடுத்தபோது அந்த நபர் பெற்றுக்கொள்ள மறுத்து, நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நான் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தேன். இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரத்தினவேலிடம் தெரிவித்தனர். இதனால் நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story