திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செங்குன்றம் அருகேயுள்ள பூச்சிஅத்திப்பேடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரவி தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- 

பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த நாங்கள் திட்டத்தை ரத்து செய்து விட்டு நிலத்தினை மீண்டும் கிராம பயன்பாட்டிற்கு திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

இங்கு அமைக்கப்பட உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு 20 மீட்டர் தூரத்தில் பூண்டி முதல் சோழவரம் ஏரிக்கு குடிநீர் செல்லும் சென்னை குடிநீர் பிரதான கால்வாய் அமைந்துள்ளது.

மேலும் சற்று தூரத்தில் கொசஸ்தலை ஆறு உள்ளது. எனவே குடிசை மாற்று வாரியம் வீடுகளை அமைப்பதால் வீடுகளில் உள்ள கழிவு நீரால் ஏரிகள் மாசடைந்து விடும். இந்நிலையில் அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து குடியிருப்புகள் அமைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதை அறிந்த நாங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகளை அமைக்க கூடாது என கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story