உளுந்தூர்பேட்டையில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


உளுந்தூர்பேட்டையில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 29 Jan 2019 11:00 PM GMT (Updated: 29 Jan 2019 6:26 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 29-ந் தேதி (அதாவது நேற்று) உளுந்தூர்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கடந்த ஒரு வாரமாக பேரூராட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் மணிமொழி, தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான பேரூராட்சி அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

அப்போது கடைவீதியில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அப்புறப்படுத்தினர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத பகுதிகளையும் அதிகாரிகள் கண்டறிந்து, அங்கிருந்த ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டது.

நேற்று மட்டும் 50 ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன. மேலும் 370 கடைகளின் முன்பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் அகற்றப்பட்டது. இதற்கிடையே உளுந்தூர்பேட்டையில் நீண்ட நாட்களாக சர்ச்சைக்குரிய இடத்தில் செயல்பட்டு வந்த ஆட்டோ நிறுத்தத்தை போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.

Next Story