செஞ்சி அருகே மனைவியை சமாதானப்படுத்துவதற்காக கள்ளக்காதலியை கொன்று வீடியோ எடுத்த தொழிலாளி
செஞ்சி அருகே மனைவியை சமாதானப்படுத்துவதற்காக தொழிலாளி ஒருவர் தனது கள்ளக்காதலியை கொன்று வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி மகன் தேவேந்திரன் (வயது 25), தொழிலாளி. இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தேவேந்திரனுக்கும் அதேஊரை சேர்ந்த குப்புசாமி மனைவி குட்டியம்மாள்(43) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கலைச்செல்வி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி தேவேந்திரன் உல்லாசம் அனுபவிப்பதற்காக குட்டியம்மாளை தேடி அதேஊரில் உள்ள மலையடிவாரத்துக்கு சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன், குட்டியம்மாளை அடித்து கொலை செய்து பிணத்தை அங்குள்ள முட்புதரில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் கொலை வழக்குப்பதிந்து செஞ்சி அருகே பதுங்கி இருந்த தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் சிக்கிய மெமரிகார்டு
இதனிடையே போலீசார் தேவேந்திரன் வீட்டில் தடயங்கள் ஏதும் உள்ளதா? என சோதனையிட்டனர். அப்போது போலீசாரிடம் ஒரு ‘மெமரிகார்டு’ சிக்கியது. அதனை போலீசார் செல்போனில் போட்டு பார்த்தபோது, தேவேந்திரன் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோ எடுத்தபடி, ‘நான் சொல்லியதை கேட்காமல் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்ததால் தான் நீ இப்போது பிணமாக கிடக்கிறாய்’ என்று கூறும் காட்சி பதிவாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன்விவரம் வருமாறு:-
செஞ்சி நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சுமதி. இவருக்கு திருமணமாகி விட்டது. இவருக்கும் உறவினரான பெரும்புகையை சேர்ந்த தேவேந்திரனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமதி அடிக்கடி தேவேந்திரன் வீட்டுக்கு சென்று வந்ததால், சந்தேகமடைந்த கலைச்செல்வி தனது கணவரை கண்டித்ததோடு, சுமதியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இல்லையென்றால் நான் எனது தாய் வீட்டுக்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து தேவேந்திரன் சுமதியிடம் இனிமேல் எனது வீட்டுக்கு வராதே என்று கூறிவிட்டார். இருப்பினும் சுமதி தேவேந்திரன் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் சுமதியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அந்த திட்டப்படி தேவேந்திரன் சுமதியிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் வா என கூறி அவரை கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பெரும்புகை மலையடிவாரத்துக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்தார். பின்னர் அவர் சுமதியின் பிணத்தை வீடியோவாக எடுத்தார். அதை தனது மனைவியிடம் காட்டிய தேவேந்திரன் இனிமேல் சுமதி என்னை தேடி வீட்டுக்கு வரமாட்டாள் என்று கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலாளி தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 2 பெண்களை அடித்துக் கொன்று மலையடிவாரத்தில் வீசியதும், அதில் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவியை சமாதானப்படுத்திய சம்பவமும் செஞ்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story