பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த போலி போலீஸ்காரர் கைது
குரோம்பேட்டை பகுதியில் போலீஸ்காரர் போல் நடித்து அங்குள்ள வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே பழைய டிரங்க் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் போலீஸ் ஏட்டு டில்லிபாபு ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீஸ் உடையில் வாலிபர் ஒருவர் சுற்றிகொண்டிருந்தார்.
டில்லிபாபுவை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை பிடித்து பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், பிடிபட்ட வாலிபர் சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்த தினகரன் (வயது 22) என தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தினகரன் சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர், கடந்த 3 மாதங்களாக இரவு நேரங்களில் போலீஸ் உடையுடன் பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளில் நிஜ போலீஸ்காரர் போல் வலம் வந்து, பல்லாவரம், ஈஸ்வரி நகர் சுரங்கபாலம் பகுதி, பழைய டிரங்க் ரோடு போன்ற பகுதிகளில் வாகன ஓட்டிகளை மறித்து சோதனை என்ற பெயரில் ஆவணங்களை கேட்டு, பணம் வாங்கி கொண்டு எச்சரிக்கை செய்து வசூல் வேட்டை செய்துள்ளார்.
சிறையில் அடைப்பு
மேலும், தினகரன் அந்த பகுதிகளில் இரவு ரோந்து போலீஸ் போல சென்று ஓட்டல்கள், டீ கடைகளில் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிய வந்தது. அதிகாலை 2 மணிவரை அவர் போலி போலீசாக வலம் வந்துவிட்டு, பின்னர் காலையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் பல்லாவரம் பகுதியில், ரோந்து சென்ற உண்மையான போலீசை பார்த்ததும் எங்கே தன்னை பிடித்துவிடுவார்களோ என்று நினைத்து தினகரன் தப்பி ஓடிய போது போலீசாரிடம் பிடிபட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தினகரனை கைது செய்து, தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story