காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி திருமணம் தற்கொலை செய்ய முடிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் மனம் மாறினர்


காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி திருமணம் தற்கொலை செய்ய முடிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் மனம் மாறினர்
x
தினத்தந்தி 30 Jan 2019 3:45 AM IST (Updated: 30 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். தற்கொலைசெய்ய முடிவு செய்தவர்கள்கடைசி நேரத்தில் மனம் மாறி திருமணம் செய்தனர்.

பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் சிக்கோடி அருகே கப்பூரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 27). இவரும் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த ரஷ்மி (22) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே பூதனகுட்டே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று திருமணம் செய்துகெண்டனர். பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் முதலில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டு திருமணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் ‘செல்பி’ வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மஞ்சுநாத் பேசுகையில், ‘நானும், ரஷ்மியும் தீவிரமாக காதலித்து வந்தோம். எங்களின் காதல் விவகாரம் தெரிந்து இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்மியின் வீட்டினர் என்னை மிரட்டினர். இதனால், நாங்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினோம். ஆனால் எங்களுக்கு தற்கொலை செய்ய விருப்பமில்லை.

இதனால் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம். எங்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், இருவீட்டாரும் எங்களுக்கு வேறுேவறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயன்றனர். அதில் எங்களுக்கு இஷ்டம் இல்லை. எங்களின் திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதனால் எங்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இருவீட்டாரும் தான் காரணம்’ என்று அவர் கூறியிருந்தார்.

அந்த வீடியோவில், ரஷ்மி பேசுகையில், ‘அவருடைய (மஞ்சுநாத்) உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம். என்னுடைய காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததும், எனக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்த திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லாததால் நான் மஞ்சுநாத்துடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். முதலில் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள தான் முடிவு செய்து சென்றோம். ஆனால் எங்களின் முடிவை மாற்றிக் கொண்டு திருமணம் செய்துகொண்டுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து, ‘நண்பர்களே, எங்களின் திருமணத்திற்கு அனைவரும் வாழ்த்த வேண்டும். நாங்கள் தற்கொலைக்கு முடிவு செய்து தற்போது திருமணம் செய்துள்ளோம். இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள். பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கும் காதல் ஜோடிகள் எங்களை போன்று திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story