தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் ஆதாரை இணைக்க வேண்டும் அதிகாரி தகவல்
தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்கள், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழிச்செல்வி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாநில அளவில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், அரசு நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர், உடலுழைப்புத் தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுனர்கள், தையல் தொழிலாளர், முடித்திருத்துவோர், சலவைத் தொழிலாளர், பனைமரத் தொழிலாளர், காலணி தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டுப்பணியாளர், சமையல் தொழிலாளர் ஆகியோர் உள்பட 17 நலவாரியங்களில் மாவட்டம் முழுவதிலும் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தை சேர்ந்த மேற்படி வாரியங்களில் பதிவு செய்து இதுவரை புதுப்பிக்காத தொழிலாளர்கள் மற்றும் ஆதார் எண் விவரத்தை இந்த அலுவலகத்திற்கு தெரிவிக்காத தொழிலாளர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன், ஆதார் அடையாள அட்டை நகலை இணைத்து வருகிற மார்ச் மாதம் 31–ந் தேதிக்குள் 138, மதுரை ரோடு, மாதா கோவில் எதிரில் இயங்கி வரும் சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் உறுப்பினர்கள், தங்களது உறுப்பினர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணையும் கட்டாயம் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.