நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் கலெக்டர் தகவல்
நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதோடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மாவட்டத்தில் ராஜபாளையம் தாலுகா சேத்தூர் மற்றும் தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு மற்றும் கான்சாபுரம் ஆகிய 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ. 1770 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.70 என மொத்தம் ரூ.1840 வழங்கப்படும். பொது ரக நெல் குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 1,750 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ. 50 என மொத்தம் ரூ. 1,800 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல்லை தூற்றி சுத்தம் செய்யப்பட்டு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்;கு குறைவாக இருக்கும்பட்சத்தில் கொள்முதல் செய்யப்படும். தனியாரை நாடி குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையினை தவிர்த்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் மூலம் ராஜபாளையம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்து பாசிப்பயறு உற்பத்தி செய்துள்ளதை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் வருகிற 1–ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் முடிய கொள்முதல் செய்யப்பட உள்ளது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 300 டன், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 300 டன், விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 400 டன் அளவிலும் பாசிப்பயிரின் குறைந்தபட்ச ஆதார விலையான கிலோவிற்கு ரூ.69.75–க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பாசிப்பயிரினை நன்கு உலர வைத்தும், தரமானதாகவும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவரவேண்டும். விற்பனைக்கு பாசிப்பயிரினை கொண்டுவரும்போது சம்பந்தப்பட்ட விவசாயிகள், அடையாள அட்டை, அடங்கல் (பாசிப்பயறு சாகுபடி செய்த விவரம், பரப்பு), ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டுவரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக் கூடிய விவசாயிகளின் வருமானம் பருவமழையை சார்ந்தே உள்ள நிலையில் வறட்சியிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருப்பது கால்நடை வளர்ப்பு மட்டுமே.
அதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு 2011– ம் ஆண்டு முதல் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்ததந்த கிராமத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களாக உள்ள பெண்கள், மகளிரை குடும்பத்தலைவராக கொண்ட பெண்கள், சொந்தமாக ஆடுகள் இல்லாதவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். பயனாளிகள் அனைவரும் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் 2011–ம் ஆண்டு முதல் 2018 வரை மாவட்டத்தில் ரூ.37 கோடி மதிப்பில் 28,849 பேருக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 396 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியுள்ளார்.