அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 77 பேர் சிறையில் அடைப்பு


அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 77 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 10:15 PM GMT (Updated: 29 Jan 2019 7:01 PM GMT)

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 77 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பள்ளிகள் மூடும் முடிவை கைவிட வேண்டும். 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேரை கைது செய்து மாலை விடுத்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட துணைத்தலைவர் முத்துவேல், நகராட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட 85 பேரை விடுக்கவில்லை.

அவர்களை நேற்று திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது உரிய விவரங்கள் சரிவர இல்லாததால் 8 பேர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 77 பேரை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 56 பேர் ஆசிரியர்கள், 21 பேர் அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story