திருவண்ணாமலையில் பரபரப்பு தனியார் குழந்தைகள் இல்லத்தில் 15 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்


திருவண்ணாமலையில் பரபரப்பு தனியார் குழந்தைகள் இல்லத்தில் 15 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தனியார் குழந்தைகள் இல்லத்தில் 15 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நிர்வாகி, மேலாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ரமணா நகர் எம்.கே.வி. தெருவில் தனியார் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் நிர்வாகி நந்தகுமார். இதில் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த குழந்தைகள் இல்லத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகள் உள்ளனர். இவர்கள் கடந்த சில தினங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகார்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கோகிலாவிற்கும் வந்தன.

இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கோகிலா தலைமையிலான அலுவலர்கள் அந்த தனியார் குழந்தைகள் இல்லத்திற்கு நேரில் சென்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து அந்த குழந்தைகளை அலுவலர்கள் மீட்டு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனியார் குழந்தைகள் இல்ல நிர்வாகி மற்றும் மேலாளரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story