போலீஸ் நிலையத்தில் பெண்கள் மீது தாக்குதல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவு


போலீஸ் நிலையத்தில் பெண்கள் மீது தாக்குதல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், போலீஸ் நிலையத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உதவி சப்-இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரேணுகய்யா. இந்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண்களை ரேணுகய்யா வெளியே தள்ளி அவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக விமர்சனங்கள் செய்ய தொடங்கினர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ரேணுகய்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக, பெண்களை தாக்கியது தொடர்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகய்யா நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பணி இடைநீக்க உத்தரவை பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை பிறப்பித்தார்.

இதுபற்றி தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை கூறியதாவது:-

கடந்த 19-ந் தேதி குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஓட்டலில் பிரச்சினை நடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு போன் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது பெண்ணிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டனர். அதுமட்டும் அல்லாமல் அந்த பெண்ணை அவர்கள் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றனர். இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டார்.

இதுபற்றி விசாரித்தபோது மீட்கப்பட்ட பெண்ணுக்கு 11 வயது இருந்தபோது அவரை, அவருடைய தாய்மாமனுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். 6 ஆண்டுகள் ஆந்திராவில் குடும்பம் நடத்திய பின் அந்த வாழ்க்கை பிடிக்காததால் அந்த பெண் பெங்களூருவுக்கு வந்து ஓட்டலில் பணி செய்து தனியாக வாழ தொடங்கினார். குடும்பத்தினருடன் அவர் செல்ல விரும்பவில்லை.

இந்த நிலையில் ஓட்டலில் இருப்பதை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அங்கு வந்து அவரை ஆந்திராவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் போலீஸ் நிலையத்துக்கு வந்து அந்த பெண்ணை தங்களுடன் அனுப்பும்படி கூறி பிரச்சினையில் ஈடுபட்டனர். அனுப்பவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் கூறி தகராறு செய்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் விரும்பாததால் அவர்களை அங்கிருந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். ஆனால், அவர்கள் அதை கேட்காமல் போலீஸ் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இந்த வேளையில் அங்கு வந்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெண்களை வெளியே தள்ளி தாக்கினார். அவருடைய நடவடிக்கை தவறானது. இதனால் பணி இடைநீக்கம் செய்துள்ளேன். சம்பவம் குறித்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணை அறிக்கைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்தவுடன் நேற்று கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி பாய் குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு, போலீசாரால் மீட்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின்போது, அந்த பெண் தனது குடும்பத்தினருடன் செல்ல விரும்பவில்லை எனவும், தவறு அனைத்தும் அவர்கள் மீது தான் உள்ளதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story