கடைமடை பகுதி நெற்பயிர்களை காக்க மேட்டூர் அணையை மீண்டும் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


கடைமடை பகுதி நெற்பயிர்களை காக்க மேட்டூர் அணையை மீண்டும் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதி நெற்பயிர்களை காக்க மேட்டூர் அணையை மீண்டும் திறக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார்: சம்பா நெல் அறுவடை பணி நடைபெறுவதால் தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். சாக்கு தட்டுப்பாடு இன்றி வழங்குவதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ந் தேதி திறக்கப்படாமல் தாமதமாக தான் திறக்கப்பட்டது. கடைமடை பகுதி நெற்பயிர்களுக்கு தண்ணீர் இன்னும் தேவை. இதனால் மேட்டூர் அணையை மீண்டும் திறந்து கடைமடை நெற்பயிர்களை காக்க தண்ணீர் விட வேண்டும்.

பள்ளத்தூர் கூத்தாலிங்கம்: கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இன்னும் 15 நாட்களுக்கு கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டால் தான் நெற்பயிரை காக்க முடியும். இப்போது வரும் தண்ணீர் பள்ளத்தூர் வரை தான் செல்லும். புதுப்பட்டினம் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாது. மேட்டூர் அணையில் 70 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் 7 நாட்களுக்காவது கல்லணைக்கால்வாயில் தண்ணீர் செல்லும் வகையில் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்.

கலெக்டர் அண்ணாதுரை:- வழக்கத்தைவிட 20 சதவீத மழை குறைந்துள்ளது. தற்போது வரும் தண்ணீர் 4 நாட்களுக்கு கல்லணைக் கால்வாயில் செல்லும்.

பொன்னவராயன்கோட்டை வீரசேனன்:- கஜா புயல் பாதிப்பு குறித்து மறு கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடைமடை பகுதிகளில் மணல், மண் ஆகியவை சட்டவிரோதமாக தனி நபர்களால் திருடப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடும், வறட்சியும் ஏற்பட காரணமாக உள்ள மணல், மண் திருட்டை தடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் 4-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

தஞ்சை செந்தில்குமார்:- நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வாடகை தொகையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் வாடகை தொகை வசூலித்தால் புகார் தெரிவிக்க அதிகாரிகள் செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story