ஆம்பூர் அருகே டிராக்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி - 50 பேர் படுகாயம்


ஆம்பூர் அருகே டிராக்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி - 50 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே டிராக்டர் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்பூர், 

பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மசிகம், கொத்தூர் பகுதிகளில் இருந்து ஆம்பூருக்கு ‘ஷூ’ கம்பெனி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு 60-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டில் இருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு தனியார் பஸ்சில் வந்தனர். சிவனேசன் (வயது 52) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் பஸ் வந்த போது திடீரென அந்த வழியாக துண்டு தோல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மீது பஸ் மோதிவிட்டு, அருகே இருந்த சாலையோர புளியமரத்தில் பஸ் மோதி நின்றது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவனேசன், மசிகம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (52), ராஜேந்திரன் (52), லோகேஷ் (23), தமிழரசு (28), பன்னீர் (59), அஜித்குமார் (22), ராஜேஸ்வரி (45), மகேஸ்வரி (50), நிர்மலா (48), உஷாராணி (29), அமுதா (45), மகாலட்சுமி (18), சசிகலா (40) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த 50 பேரில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் மசிகம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்ற 11 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி அறிந்ததும் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, ஆம்பூர் தாசில்தார் சுஜாதா ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் ராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Next Story