மகள் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார், ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு


மகள் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார், ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

மகள் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டரை உறவினர்கள் முற்றுகையிட்டு உரிய விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், தொழிலாளி. இவருக்கும், கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த சுதா (வயது 26) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு பிரபாகரன் வேறுவொரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்து உள்ளது. அப்போது பிரபாகரன் நீ எனக்கு தேவையில்லை என்றும், உன் தாய் வீட்டிற்கு சென்றுவிடு என்றும் மனைவி சுதாவிடம் கூறி மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் தனி குடித்தனம் செல்ல உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு வா என்றும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுதா கணவரிடம் கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபாகரனையும், சுதாவையும் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

சாவில் சந்தேகம்

அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதா மீண்டும் அவரது கணவர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பிரபாகரன் வீட்டில் இருந்து சுதாவின் தந்தை முனுசாமிக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், உங்கள் மகள் விஷம் குடித்து இறந்துவிட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதாவின் தந்தை முனுசாமி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். முன்னதாக போலீசார் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தார். அப்போது திடீரென சுதாவின் உறவினர்கள், கலெக்டரை முற்றுகையிட்டு, சுதாவின் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அப்போது சுதாவின் உறவினர் பெண் ஒருவர், கலெக்டரின் காலில் விழுந்து நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது கலெக்டர், நீங்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் உதவி கலெக்டரிடம் நடந்ததை சொல்லுங்கள். உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அறிவுறுத்துகிறேன் என்றார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story