கள்ளக்காதலனின் மனைவியை கொல்ல கோவில் பிரசாதத்தில் விஷம் கலப்பு; பெண் கைது உடந்தையாக இருந்த 2 பெண்களும் சிக்கினர்


கள்ளக்காதலனின் மனைவியை கொல்ல கோவில் பிரசாதத்தில் விஷம் கலப்பு; பெண் கைது உடந்தையாக இருந்த 2 பெண்களும் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Jan 2019 3:45 AM IST (Updated: 30 Jan 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 2 பேர் இறந்த வழக்கில், கள்ளக்காதலனின் மனைவியை கொல்ல பிரசாதத்தில் விஷம் கலந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்களும் போலீசில் சிக்கினர்.

கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் டவுனில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தயானந்த் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிந்தாமணி டவுன் கஜானனா சர்க்கிளில் உள்ள கங்கம்மா கோவிலில் கடந்த 25-ந் தேதி பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்து உள்ளனர். 9 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகித்த லட்சுமி, அமராவதி ஆகிய 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) இரவு சிந்தாமணி டவுன் சாலிபேட்டை பகுதியை சேர்ந்தவரும், ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருபவருமான கவுரி(வயது 28) என்ற பெண் சிந்தாமணி டவுன் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், லோகேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்கள் திருமணத்திற்கு முன்பே லோகேசும், அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த லட்சுமி(46) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுபற்றி எனக்கு திருமணம் முடிந்த சில நாட்களில் தெரியவந்தது. லட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி எனது கணவரான லோகேசிடம் கூறினேன். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியே சென்ற எனது கணவர் லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

மேலும் கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் லட்சுமி எனக்கு பிரசாதம் கொடுத்தார். அதை சாப்பிட்ட எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுபோல டிசம்பர் மாதம் 2-வது வாரத்திலும் எனக்கு லட்சுமி பிரசாதம் கொடுத்தார். அதை சாப்பிட்ட எனக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்ட எனக்கு லட்சுமியின் வீட்டில் வேலை செய்து வரும் அமராவதியும், கோவில் அருகே பூ விற்று வரும் பார்வதம்மாவும் பிரசாதம் கொடுத்தனர். ஆனால் நான் அதை சாப்பிடாமல் எனது அம்மா சரஸ்வதிக்கு கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர் இறந்து விட்டார்.

அப்போது தான் லட்சுமி என்னை கொல்ல முயன்று இருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக லட்சுமி, அமராவதி, பார்வதம்மா ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கவுரியை கொலை செய்ய லட்சுமி திட்டம் தீட்டியதும், இதற்காக அவர் அமராவதி, பார்வதம்மாவின் உதவியை நாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமி, அமராவதி, பார்வதம்மா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் லட்சுமி, அமராவதியிடம் 2 டிபன் பாக்சில் கேசரி கொடுத்து அனுப்பியதும், அதில் ஒரு டிபன் பாக்சில் விஷம் கலந்த பிரசாதமும், இன்னொரு டிபன் பாக்சில் விஷம் கலக்காத பிரசாதம் இருந்ததும் தெரிந்தது.

இந்த நிலையில் கோவிலுக்கு வந்த அமராவதி விஷம் கலக்காத டிபன் பாக்சில் இருந்த பிரசாதத்தை, விஷம் கலந்த டிபன் பாக்சில் இருந்த கேசரியுடன் கலந்து உள்ளார். பின்னர் அமராவதியும், பார்வதம்மாவும் சேர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகித்து உள்ளனர்.

லட்சுமியின் கணவர் மஞ்சுநாத் தங்கநகை செய்யும் ஆசாரி ஆவார். இதனால் கேசரியில், தங்கம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனத்தை கலந்து இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது.

கோவிலில் பறிமுதல் செய்யப்பட்ட பிரசாதத்தை ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். அந்த ஆய்வு அறிக்கை வந்ததும் பிரசாதத்தில் ரசாயனம்(விஷம்) கலக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

இதற்கிடையே மாயமாகி இருந்த கவுரியின் கணவர் லோகேசை சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் வைத்து போலீசார் பிடித்து உள்ளனர். அவரை போலீசார் இன்று(அதாவது நேற்று) இரவுக்குள் சிந்தாமணிக்கு அழைத்து வருவார்கள். அவர் வந்ததும் பிரசாதத்தில் விஷம் கலந்ததில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

தற்போது கைதாகி உள்ள லட்சுமி, அமராவதி, பார்வதம்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளோம். தேவைப்பட்டால் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி உடன் இருந்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விசாரணை நடத்திய தனிப்படை போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதியை ஐ.ஜி. தயானந்த் வழங்கினார்.

Next Story